நாசாவிலிருந்து வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14 ஆயிரம் ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும் ஆட்குறைப்பு செய்யப்படவுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தற்போது 2ஆவது முறையாக பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 20 சதவீத ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
அதாவது சுமார் 3 ஆயிரத்து 870 பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் குறைந்தது 2 ஆயிரத்து 145 நாசாவின் மூத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், மீண்டும் இரண்டாம் கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியானதால் நாசா ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த 20ஆம் திகதி நூற்றுக்கணக்கான நாசா ஊழியர்கள், விண்வெளி அருங்காட்சியகம் அருகே போராட்டம் செய்தமை குறிப்பிடத்தக்கது.