கனடாவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர் போராட்டம்!
கனடாவில் மூன்று கல்லூரிகள் திடீரென மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கனடாவில் கட்டணத்தை வாங்கிக்கொண்டு வகுப்புகளை தொடங்காமல் பல நாட்களாக வளாகத்தை மூடிவைத்துள்ள 3 கல்லூரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான இந்தியா மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
கனடாவின் மாண்ட்ரீல் நகரில் உள்ள டி காம்ப்டாபிலிட் மற்றும் டி செக்ரடேரியட் டு கியூபெக் கல்லூரி (CCSQ), டி ஐ'எஸ்ட்ரி கலோரி (CDE) மற்றும் எம் கல்லூரி (M College) ஆகிய மூன்று தனியார் கல்லூரிகள் திடீரென மூடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு படிக்கும் சுமார் 2,000 சர்வதேச மாணவர்கள் (பெரும்பாலானவர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், சிலர் ஆன்லைனில் கற்றல் மற்றும் சிலர் படிப்பு விசாவில் உள்ளனர்) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரிகளுக்கு எதிராக நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கல்லூரிகள் தங்களின் சில நிதிச் சிக்கல்களுக்கு கோவிட்-19 தொற்றுநோயைக் குற்றம் சாட்டிவருவதாகவும் மற்ற சட்ட அளவுகோல்களும் இந்தக் கல்லூரிகளால் பூர்த்தி செய்யப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கனேடிய எம்பி ஒருவர் கூறியுள்ளார்.
மூன்று கல்லூரிகளும் நவம்பர் 30, 2021 முதல் ஜனவரி 10, 2022 வரை நீண்ட குளிர்கால விடுமுறைகளை அறிவித்தன. பின்னர், மாணவர்கள் நிலுவையில் உள்ள கட்டணத்தை ஒரு வாரத்திற்குள் டெபாசிட் செய்யுமாறு கல்லூரிகள் கேட்டுக் கொண்டன. பெரும்பாலான மாணவர்கள் முழு பணத்தையும் கட்டிய நிலையில், எந்த அறிவிப்பும் இன்றி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்தப் பணம் 15,000 முதல் 29,500 கனேடிய டொலர்கள் வரை இருந்தது. இது இந்திய மதிப்பில் ரூபாய் 9 லட்சம் முதல் ரூபாய் 17.70 லட்சம் வரை வருகிறது. ஜனவரி 29, 2022 அன்று, வேறு வழியின்றி, 'மாண்ட்ரீல் இளைஞர்-மாணவர் அமைப்பு' (MYSO) என்ற பதாகையின் கீழ் மாணவர்கள் தங்கள் வழக்கில் நீதி கோரி மாண்ட்ரீலில் உள்ள லாசல்லிலுள்ள குருத்வாரா குருநானக் தர்பாரில் பேரணி நடத்தினர்.
இது தொடர்பான கடிதம் ஒன்றை கனடாவின் கல்வி அமைச்சர், கனடாவுக்கான இந்திய தூதர், மான்ட்ரியல் எம்.பி மற்றும் எதிர்க்கட்சிகளின் பல்வேறு அமைச்சர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.