கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் குண்டு மிரட்டல்: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அப்பர் வோட்டர் வீதியில் அமைந்துள்ள 'பேர்டிஸ் வார்ஃப்' வாகன நிறுத்துமிடத்தில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், காலை 8:45 மணியளவில் அங்கிருந்த மக்கள் முதன்முதலாக வெளியேற்றப்பட்டனர்.
குறித்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து பொலிஸார் அந்தச் சந்தேகத்திற்குரிய வாகனத்தைச் சோதனையிட்டனர். நிலைமையின் தீவிரத்தைக் கருதி, காலை 10:15 மணியளவில் பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டிய பகுதி விரிவுபடுத்தப்பட்டது.

பேரிங்டன் வீதி, அமலமேக் வழி சந்திப்பு, அப்பர் வோட்டர் வீதி, பிரன்ஸ்விக் வீதி / டொக்டர் ஆல்ஃப்ரெட் வேடெல் வீதி முதல் பிரன்ஸ்விக் வீதி காக்ஸ்வெல் வீதி வரை, டியூக் வீதி / பேரிங்டன் வீதி சந்திப்பில் இருந்து அப்பர் வோட்டர் வீதி வரையிலான பகுதிகள் மூடப்பட்டன.
இந்த வெளியேற்ற உத்தரவு அப்பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் பாதசாரிகளும் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என ஹாலிஃபாக்ஸ் பிராந்திய பொலிஸார் அறிவித்தனர்.
இந்த வெளியேற்ற மண்டலத்தில் பல ஹோட்டல்கள், உணவகங்கள், ஸ்கோஷியா சதுக்கம் மற்றும் அரசு அலுவலகங்கள் அடங்கியுள்ளன. பொலிஸாரின் தேவைக்கேற்ப அருகிலுள்ள பக்கவாட்டுச் சாலைகளும் மூடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிஃபாக்ஸ் ட்ரான்சிட் பேருந்துகள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் அதேவேளையில், படகு முனையம் திறந்திருக்கும் என்றும் பயணிகளுக்கு வழிகாட்ட ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10:30 மணியளவில் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.
அதில், சந்தேகத்திற்குரிய வாகனம் உட்பட அப்பகுதியைப் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கிளேட்டன் பூங்காவில் உள்ள கனடா கேம்ஸ் சென்டர் அருகே தோமஸ் ரேடால் டிரைவ் பகுதியில் வைத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பிற்பகல் 1:30 மணியளவில் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, அப்பகுதியில் தற்போது உடனடி அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், விசாரணை தொடர்வதால் குறைந்த அளவிலான பொலிஸ் பாதுகாப்பு அங்கே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.