கரடி வேடமணிந்து 1.41 இலட்சம் டொலர் காப்புறுதி மோசடி செய்த மூவருக்கு சிறை
சொகுசு மகிழுந்துகளை கரடி தாக்கியதாகக் கூறி, சுமார் 1.41 இலட்சம் டொலர் காப்புறுதிப் பணத்தை மோசடி செய்த கலிபோர்னியாவைச் சேர்ந்த மூவருக்கு 180 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஜனவரி 28 ஆம் திகதி, கலிபோர்னியாவின் லேக் அரோஹெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2010 ரோல்ஸ் ரோய்ஸ் கோஸ்ட் மற்றும் இரண்டு மெர்சிடிஸ் பென்ஸ் ரக மகிழுந்துகளுக்குள் கரடி புகுந்து சேதப்படுத்தியதாகக் கூறி காப்புறுதி நிறுவனங்களிடம் காணொளி ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

சமர்ப்பிக்கப்பட்ட காணொளிகளை ஆய்வு செய்த கலிபோர்னியா வனவிலங்குத் துறை உயிரியலாளர்கள், அதில் இருப்பது உண்மையான கரடி அல்ல, கரடி போன்ற உடையணிந்த மனிதர்கள் என்பதை உறுதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காப்புறுதித் துறை "ஒபரேஷன் பியர் கிளா" (Operation Bear Claw) என்ற அதிரடி விசாரணையைத் தொடங்கியது.
சந்தேக நபர்களின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கரடி உடை கண்டெடுக்கப்பட்டது.
இதன் மூலம் சுமார் 1,41,839 டொலர் பணத்தை மோசடி செய்ய முயன்றது அம்பலமானது. இந்த மோசடியில் ஈடுபட்ட அல்ஃபியா ஸுக்கர்மேன் (39), ரூபன் தம்ராசியன் (26) மற்றும் வஹே முராத்கன்யன் (32) ஆகிய மூவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து அவர்களுக்கு தலா 180 நாட்கள் சிறைத்தண்டனையும், இரண்டு ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
"நம்ப முடியாத ஒரு விடயம், உண்மையில் பொய்யாகவே முடிந்துவிட்டது; தற்போது குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்" என மாநில காப்புறுதி ஆணையாளர் ரிகார்டோ லாரா தெரிவித்துள்ளார்.