கனடாவில் தீவிரமாக தேடப்பட்டுவரும் 17 வயது சிறுவன்
டாக்ஸி சாரதி ஒருவரை சுட்டுக் கொன்றது தொடர்பாக 17 வயது சிறுவனை ரொறன்ரோ பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரொறன்ரோவை சேர்ந்த 17 வயது Isaiah Twyman தொடர்பில் கனடா முழுமையும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ட்வைமன் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தாலும் அவரை அடையாளம் காண நீதித்துறை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, குறித்த நபர் ஆயுததாரியாகவும், ஆபத்தானவராகவும் வன்முறை குணம் கொண்டவராகவும் இருக்க வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் அவரை அடையாளம் காண நேர்ந்தால், அவரிடம் நெருங்காமல் 911 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 24ம் திகதி மாலை, டாக்ஸி சாரதி ஒருவர் சாலையோர வேலியில் மோதியதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, பார்மசி அவென்யூ மற்றும் எக்லின்டன் அவென்யூ ஈஸ்ட் பகுதிக்கு அதிகாரிகள் தரப்பு விரைந்தனர். இதனையடுத்து, துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்ட நபர் 73 வயதான Christopher Jung என பொலிசார் அடையாளம் கண்டனர்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த சாரதி, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.