ஆண்டுக்கு சுமார் 4 நாட்களை சாலையிலேயே இழக்கும் கனடாவின் இந்த நகர சாரதிகள்
கடந்த ஆண்டு முழுவதும், டொராண்டோ நகரில் சாரதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் சுமார் நான்கு நாட்களுக்கு சமமான நேரத்தை இழந்துள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
டொம் டொம் TomTom வெளியிட்டவருடாந்த போக்குவரத்து நெரிசல் சுட்டி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் அதிக நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் டொராண்டோ இரண்டாவது இடத்தை வகிக்கின்றது என்பதுடன் இந்த வரிசையில் வான்கூவர் முதலிடத்தில் உள்ளது.

2025 ஆம் ஆண்டில் நெரிசலான நேரங்களில் டொராண்டோ சாரதிகள் மொத்தமாக 100 மணிநேரம் (4 நாட்கள் மற்றும் 4 மணி நேரம்) இழந்துள்ளனர். இது 2024 ஐ விட 3 மணி 50 நிமிடங்கள் அதிகமாகும்.
எனினும், 2023 இல் வட அமெரிக்காவின் மிக மோசமான போக்குவரத்து நகரமாக இருந்த டொராண்டோவில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டொராண்டோ பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
“இது முழுமையான முன்னேற்றம் என்று அர்த்தமில்லை. ஆண்டுக்கு 100 மணி நேரம் இழப்பது பயணிகளின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது,” என்று அந்த நிறுவனத்தின் இயக்குநர் மாட்டி சியெமியாட்டிக்கி தெரிவித்தார்.