கனடாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் இளைஞர் கைது
ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக டொரொண்டோவைச் சேர்ந்த ஒரு இளைஞரை கனடா அரச காவல்துறை (RCMP) கைது செய்துள்ளது.
குற்றச்சாட்டுகளின்படி, இவ்வாண்டு ஜூன் 17 முதல் ஆகஸ்ட் 17 வரையிலான காலப்பகுதியில் இந்த குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
27 வயதுடைய டொரொண்டோவைச் சேர்ந்த வலீத் கான் (Waleed Khan) என்பவரை நவம்பர் 26ஆம் திகதி பொலிஸார் கைது செய்தது.

இவர், டொரொண்டோ காவல்துறை மற்றும் பீல் பிராந்திய காவல்துறை நடத்திய கூட்டு விசாரணையில் (Project Neapolitan) குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபர்களில் ஒருவர் ஆவார்.
இந்த விசாரணை, வெறுப்பால் தூண்டப்பட்ட தீவிரவாதத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு குற்றங்கள் தொடர்பானது.
இதில் பெண்கள் மற்றும் யூத சமூகத்தினரை இலக்காகக் கொண்ட குற்றங்கள் அடங்கும். குற்றச்சாட்டுகளில் கடத்தல், துப்பாக்கியுடன் கடத்தல் முயற்சி, பாலியல் தாக்குதல் செய்ய சதி, பிணைக் கைதி எடுத்தல் உள்ளிட்டவை அடங்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
வலீத் கான் மீது டொரொண்டோ காவல்துறை விசாரணை தொடர்பாக பல டஜன் குற்றச்சாட்டுகள் உள்ளன.
பொலிஸ் விசாரணையில் ஏழு தீவிரவாத தொடர்புடைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த கைது, சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.