கனடாவில் காதல் மோசடிகள் அதிகரிப்பு
கனடாவில் காதல் வலையில் சிக்க வைக்கும் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இந்த ஆண்டு இதுவரை 778 கனடியர்கள் மொத்தம் 54.6 மில்லியன் டொலர் இழந்துள்ளதாகவும் கனடிய மோசடி தவிர்ப்பு பிரிவு அறிவித்துள்ளது.
அத்தகைய மோசடிகளில் சிக்கி 80,000 டொலர்களை இழந்த டொரொண்டோவைச் சேர்ந்த ஹ்யூகோ சாஞ்செஸ் தனது அனுபவத்தை பகிர்ந்து, மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
என் திருமணம் முறிந்தது ஒரு துயரமான அனுபவம். நான் உணர்ச்சி ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் இருந்தேன். இணையத்தில் ஒருவரை சந்தித்து நெருக்கமான உறவை உருவாக்கினேன் என சாஞ்செஸ் கூறியுள்ளார்.
அந்தப் பெண் தன்னை சீட்டில் (Seattle) வசிப்பதாகவும், லினா (Lina) என அறிமுகப்படுத்தியதாகவும் சாஞ்செஸ் தெரிவித்தார். இருவரும் வீடியோ அழைப்புகளிலும், மெசேஜ்களிலும் பேசினர். சில வாரங்களுக்குள், அவள் சாஞ்செஸை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வலியுறுத்தினாள் என குறிப்பிட்டார்.
அந்தப் பெண் தனது பணம் மூன்று மடங்கு ஆகும் என்றாள். ஆனால் சில மாதங்களில் நான் 80,000 டொலர்களை இழந்தேன் எனவும் தமது சேமிப்பும், கடன் பெற்ற பணமும் அனைத்தும் போய்விட்டது எனவும் சாஞ்செஸ் கூறினார்.
சாஞ்செஸ் நாற்பதுகளில் இருந்தாலும், பொதுவாக இத்தகைய காதல் மோசடிகளில் சிக்குவோர் முதியவர்கள் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.