டொராண்டோவில் பரபரப்பு: துப்பாக்கிச் சூட்டில் மூத்த பொலிஸ் அதிகாரி மரணம்
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள நார்த் யார்க் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில், 18 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் டொராண்டோ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்க தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு உட்பட, நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை அதிகாலை 5:40 மணியளவில், பிளாக் கிரீக் மற்றும் ட்ரெத்வே சந்திப்பில் உள்ள மார்த்தா ஈட்டன் வே அடுக்குமாடி குடியிருப்பில் பொலிஸார் சோதனை ஆணை ஒன்றை அமுல்படுத்த முயன்றனர்.
அப்போது பொலிஸாருக்கும் அங்கிருந்த சந்தேக நபருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை வெடித்தது.
இந்த துப்பாக்கிப் பரிமாற்றத்தில் பலத்த காயமடைந்த 43 வயதான போலீஸ் அதிகாரி மார்க் பினிஸோட்டோ உடனடியாக சன்னிப்ரூக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் டொராண்டோ காவல் துறையின் அவசரப்பணிப் பிரிவில் கடந்த 18 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.