சிறுமியை மோசமாக துன்புறுத்திய சந்தேகநபரின் புகைப்படங்களை வெளியிட்ட அதிகாரிகள்
கனடாவின் எட்டோபிகோக் பகுதியில் 13 வயதுடைய சிறுமியொருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரின் புகைப்படங்களைக் கனடாவின் டொராண்டோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 12 ஆம் திகதி நண்பகல் வேளையில், 'மார்ட்டின் குரோவ் வீதி' மற்றும் 'அல்பியோன் வீதி' ஆகிய பகுதிகளுக்கு அருகில் வைத்து, சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குறித்த சிறுமியை அணுகியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அச்சிறுமியைப் பூங்காவொன்றிற்கு அழைத்துச் சென்ற சந்தேகநபர், அங்கு வைத்து அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாகக் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சந்தேகநபர் சுமார் 5 அடி 10 அங்குலம் உயரமும், நடுத்தர உடல்வாகும் கொண்டவர் எனவும், வெளிர் நிறக் கண்களையும், பக்கவாட்டில் மழிக்கப்பட்ட வெளிர் நிறத் தலைமுடியையும் உடையவர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் அடையாளம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் 416-808-7474 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு டொராண்டோ காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.