அமெரிக்காவில் உறைந்த ஆற்றுக்குள் விழுந்த தம்பதி உள்பட 3 இந்தியர்களுக்கு நேர்ந்த சோகம்!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் விடுமுறையை கொண்டாட சுற்றுலா சென்றுள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா (வயது 49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சந்த்லர் நகரில் வசித்து வருகிறார்.
இதனிடையே, கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையொட்டி நாராயண முட்டனா தனது மனைவி ஹரிதா 2 மகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். நாராயண முட்டனாவுடன் சேர்த்து 3 குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஆறு முழுவதும் பனியால் உறைந்திருந்தது.
அப்போது குழந்தைகளை ஆற்றின் அருகே விட்டுவிட்டு நாராயண முட்டனா (வயது 49). இவரது மனைவி ஹரிதா மற்றொரு இந்தியரான கோகுல் மெடிசெடி (47 வயது) ஆகிய 3 பேரும் உறைந்த ஆற்றின் மேல் நடந்து சென்றுள்ளனர். போட்டோ எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 3 பேரும் உறைந்த ஆற்றின் மீது நடந்து சென்றனர்.
அப்போது, திடீரென பனியால் உறைந்த ஆற்றில் வெடிப்பு ஏற்பட்டு 3 பேரும் உறைந்த ஆற்றுக்குள் விழுந்தனர். பனியால் உறைந்த ஆற்றுக்குள் விழுந்த 3 பேரையும் மீட்க சக உறவினர்கள் முயற்சித்தனர்.
ஆனால், பனியின் அடர்த்தியால் ஆற்றுக்குள் விழுந்த 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உரைந்த பனியால் உடனடியாக உயிரிழந்தனர். இது குறித்து மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் ஹரிதாவின் உடலை சில மணி நேரங்களில் மீட்டனர்.
ஆனால், அவரது கணவர் நாராயண முட்டனா மற்றொரு நபரான கோகுல் ஆகிய 2 பேரையும் பல மணி நேர நீண்ட தேடுதலுக்கு பின் பிணமாக மீட்டனர்.
போட்டோ எடுக்க சென்று உறைந்த ஆற்றுக்குள் விழுந்த கணவன் - மனைவி உள்பட 3 அமெரிக்க வாழ் இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.