கனடாவில் கருகிய நிலையில் வாகனத்திலிருந்து இரண்டு சடலங்கள் மீட்பு
கனடாவின் சர்ரே பகுதியில் வாகமொன்றிலிருந்து கருகிய நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. டிரெய்லர் தீப்பிடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
102 அவென்யூ – 12200 பிளாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த பயண டிரெய்லரில் தீப்பிடித்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சர்ரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அப்போது தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பொழுதுபோக்கு வாகனத்தின் (recreational vehicle) உள்ளே இரண்டு நபர்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர் என சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக காவல்துறையும் தீயணைப்புப் பிரிவும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
தீ பரவல் காரணமாக அருகிலுள்ள ஒரு வீடு முன்னெச்சரிக்கையாக காலி செய்யப்பட்டது.
பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, அந்த வீட்டில் வசித்தவர்கள் பாதுகாப்பாக மீண்டும் திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பாக தகவல் உள்ளவர்கள் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.