விரைவு உணவுக்கு ஆசைப்பட்டு 2000 டாலர் அபராதம் செலுத்திய பயணி!
இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்ற பயணி ஒருவரின் பைக்குள் இருந்த விரைவு உணவால் அவர் 2,000 அமெரிக்க டாலர் அபராதம் செலுத்தியிருக்கிறார்.
குறித்த பயணி சிட்னி நகரில் 567 Sausage McMuffin உணவுகளை வாங்கியிருக்க முடியும் என்று கூறப்பட்டது. பயணியின் கைப்பைக்குள் Mc Muffin உணவும், Ham Croissant எனும் உணவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
ஆஸ்திரேலியாவின் டார்வின் விமான நிலையத்தில் முட்டையும், இறைச்சியும் கொண்ட அந்த உணவுகளை மோப்ப நாய் கண்டுபிடித்தது.
அதேவேளை பயணி இவ்வளவு விலையுயர்ந்த விரைவு உணவை இதுவரை கண்டிருக்கமாட்டார் என்று ஆஸ்திரேலிய வேளாண் அமைச்சர் முர்ரே வாட் (Murray Watt) வேடிக்கையாகக் கூறினார்.
ஆஸ்திரேலியா உலகின் ஆகக் கடுமையான உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று ஆகும்.
நாட்டின் மிகப்பெரிய வேளாண்துறைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் நுண்கிருமிகள், நோய்களால் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ஆஸ்திரேலியா அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கிறது.
இதனால் நாட்டுக்குள் கொண்டுவரப்படும் அனைத்து வேளாண், இறைச்சிப் பொருள்களும் அங்கு கடுமையாகச் சோதிக்கப்படுகின்றன.