கனடாவில் உயிரிழந்த 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி நிகழ்வு
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கொல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்றுகாலை 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடுகளை ஒட்டாவா நகர் முதலவர் மேற்கொண்டு வருகிறார்.
இதில் அந்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கனடாவின் பால்மீடியா பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்ததாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் என 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக 7 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் மீது 6 கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தர்ஷனி ஏகநாயக்க என்ற 35 வயதுடைய தாயாரும், அவரது ஏழு வயது மகன், நான்கு மற்றும் இரண்டு வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மாதக் குழந்தையும் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த வீட்டில் வசித்து வந்த அவர்களது நண்பர்களில் ஒருவரான 40 வயதுடைய காமினி அமரகோன் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.
கத்தி அல்லது கூரிய ஆயுதங்களினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பில் பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி இச்சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்கான வழக்கு விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.