திருகோணமலை விவகாரம் ; கனடியத் தமிழர் பேரவை கடும் கண்டனம்
திருகோணமலையில் தற்போது நடந்துவரும் சம்பவங்களைக் கடுமையாகக் கண்டிப்பதாக கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
பௌத்தத்தின் போர்வைக்குள் அச்சுறுத்தல் மற்றும் பலவந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டவிரோத நிர்மாணத் திட்டங்கள்
இவ்விடயம் தொடர்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத நிர்மாணத் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் துணைபோவது குறித்து பேரவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
உள்ளூர் சமூகங்களின் தெளிவான ஆட்சேபனைகள் இருந்தபோதிலும் இந்தக் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. அச்சுறுத்தல் மற்றும் பலவந்தமான இந்த முறை, அப்பகுதியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மீண்டும் இலங்கையில் இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தப்படுவதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
சட்டவிரோதக் கட்டுமானம், சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்தல் மற்றும் தமது பிராந்திய உரிமைகளை நிலைநாட்ட சின்னங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்தின் ஆட்சி, நம்பிக்கையுடனான நல்லிணக்கத்துக்குத் தேவையான முயற்சிகள், இனங்களுக்கிடையேயான நம்பிக்கைப் பிணைப்புகள் மற்றும் சமாதானத்தை அச்சுறுத்துகின்றன.
சுற்றாடல் அமைச்சு கடந்த ஒக்டோபரில், கோவிலுக்கு அடுத்த நிலப்பகுதியில் உள்ள பிரதான பொறுப்பாளருக்கு சட்டவிரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறு பணித்திருந்தது.
இந்த நேரடியான உத்தரவுக்கு மாறாக, அமைச்சின் கட்டளையை முழுமையாக மீறி, சட்டவிரோத கட்டுமானம் நிறுத்தப்படாமல், அங்கு புத்தர் சிலை நிறுவப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கனடியத் தமிழர் பேரவை, இலங்கை அரசாங்கத்தை அதன் சொந்த விதிமுறைகள் மற்றும் சட்டங்களை அமல்படுத்தவும், அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் நிலைநிறுத்தவும், இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அழைப்பு விடுக்கிறது.
திருகோணமலையிலும் நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்தையும் பேரவை வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.