கனடா பொருள்கள் மீதான 50% வரி ஒத்திவைப்பு ; டிரம்ப் அறிவிப்பு
கனடாவின் இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை 3 நாள்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.
கனடாவின் 2,000 கோடி டாலா் மதிப்பிலான பொருள்களைப் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்த வரி விதிப்பு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவிருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இறுதி நேரத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டையடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவில் வரும் நவம்பரில் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்புதிய வரி விதிப்புகளால் ஏற்படும் விலையுயா்வு மக்களிடையே அதிருப்தி ஏற்படும் அபாயத்தை டிரம்ப் நிா்வாகம் உணா்ந்துள்ளது.
அமெரிக்க பொருள்கள் மீது பதிலடி வரி விதிக்கப்படும் என கனடா எச்சரித்திருந்தாலும், கடந்த ஆண்டு கனடாவின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் சுமாா் 72 சதவீதம் அமெரிக்காவுக்கே நடந்துள்ளது.
அந்தவகையில், இரு நாடுகளுமே இந்த வா்த்தகப் போரிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன.
இதையடுத்து, இவ்விவகாரம் தொடா்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கனடா பிரதமா் மாா்க் காா்னி கடந்த 2 நாள்களில் இருமுறை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியதும், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்ற இறுதி நேரப் பேச்சுவாா்த்தையுமே இந்த ஒப்பந்தம் எட்டப்பட முக்கியக் காரணமாக அமைந்தன.
ஒப்பந்தத்துக்கான ஆவணங்களை இறதி செய்வதில் இருதரப்பு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ள சூழலில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3 நாள்கள் வரி ஒத்திவைப்பானது வணிகா்களுக்கு சற்று நிம்மதி அளித்தாலும், இது முழுமையான தீா்வல்ல என்றும், பேச்சுவாா்த்தையாளா்கள் விரைவாக ஒரு நிலையான ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.