வாயை மூடு பன்றிக்குட்டி... பெண் ஊடகவியலாளரிடம் சீறிய ட்ரம்ப் ; வெடித்தது புதிய சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது ”வாயை மூடு பன்றிக்குட்டி” என கூறியவிடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த 14ம் தேதி, அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

பெரும் கண்டனங்கள்
அப்போது, ‘எப்ஸ்டீன் கோப்புகளில் குற்றஞ்சாட்டும்படி எதுவும் இல்லை என்றால், அது தொடர்பான அனைத்து விவரங்களையும் வெள்ளை மாளிகை ஏன் வெளியிடக் கூடாது?’ என்று புகழ்பெற்ற செய்தி நிறுவனத்தின் மூத்த நிருபரும், வெள்ளை மாளிகை செய்தியாளருமானகேத்தரின் லூசி கேள்வி எழுப்பினார்.
ஏற்கெனவே இதேபோன்ற கேள்விக்கு பதிலளித்திருந்த ட்ரம்ப், லூசி மீண்டும் ஒரு துணைக் கேள்வி கேட்க முயன்றபோது அவரைக் கையமர்த்தி, ‘வாயை மூடு... வாயை மூடு பன்றிக்குட்டி’ என்று கூறிவிட்டு, அடுத்த நிருபருக்கு வாய்ப்பளித்தார்.
இந்த காணொலி வெளியாகி பெரும் கண்டனங்கள் எழுந்தன. ஊடகத்துறையினர் பலரும் ட்ரம்பின் பேச்சு ‘அருவருப்பானது’ மற்றும் ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று விமர்சித்தனர்.
ஆனால், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், ‘கேத்தரின் லூசி சக நிருபர்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டார். ஒன்றைக் கொடுத்தால், அதைத் திரும்பப் பெறும் திறனும் இருக்க வேண்டும்’ என்று கூறியது, சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.