இஸ்ரேல் தாக்குதல் தொடர்பில் டிரம்ப் அதிருப்தி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் தருவாயில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட மிகவும் நெருக்கமாக இருக்கும் இந்த முக்கியமான நாளில் பெய்ரூட் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நடைபெறக்கூடாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், லெபனானையும் உள்ளடக்கிய மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தக்கூடிய ஒப்பந்தம் மிகவும் அருகில் உள்ளது. எனவே அனைத்து தரப்பினரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், லெபனானில் இஸ்ரேல் மேலும் எந்தத் தாக்குதலையும் நடத்தக் கூடாது எனவும் அதேபோல் ஹிஸ்பொல்லா உள்ளிட்ட எந்த அமைப்பும் இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
நீண்டகால அமைதிக்கான புதிய தொடக்கமாக இது அமையலாம். அதை நாம் இழந்துவிடக் கூடாது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரானின் உயர்மட்ட பேச்சுவார்த்தை பிரதிநிதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான முகம்மது பகர் காலிபாப், இஸ்ரேலின் தாக்குதல்கள் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் விருப்பமோ அல்லது திறனோ இல்லை. அப்படியானால் பேச்சுவார்த்தையைத் தொடர்வதில் அர்த்தமில்லை என கூறியுள்ளார்.
இதற்கிடையில், பெய்ரூட்டின் தாஹியே பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு இஸ்ரேலை நோக்கி ஹழஸ்பொல்லா ஏவுகணைகள் ஏவியதற்கான பதிலடி நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுகுறித்து டிரம்ப் சந்தேகம் வெளியிட்டுள்ளார். "இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ள உரிமை உள்ளது.
ஆனால் இதற்கு காரணமான தாக்குதல் மிகவும் சிறியதாக இருந்தது. அதில் யாரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை. எனவே இந்த அமைதி முயற்சியை பாதிக்கும் வகையில் பதிலடி நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.