ட்ரம்ப் வெளியிட்ட நிம்மதி தரும் செய்தி ; முற்றுப் பெறும் நிலையில் மோதல்
ஈரானுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இராணுவ மோதல்கள் மிக நீண்ட காலத்திற்கு நீடிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஹோர்முஸ் நீரிணைப் (Strait of Hormuz) பகுதி தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதன்கிழமை மீண்டும் மோதல்கள் உருவானதை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை அமெரிக்கா வெற்றிகரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.
தினசரி மில்லியன் கணக்கான பீப்பாய் மசகு எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படுவதாகவும், எப்போதாவது ஈரான் ஏவும் ஆளில்லா விமானங்களை (Drones) அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தி வருவதாகவும் அவர் கூறினார்.
பாரசீக வளைகுடாவில் முக்கிய கடல்வழிப் பாதையாகத் திகழும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா மிகவும் வலுவான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், பெரும் தடங்கல்கள் எதுவுமின்றி எண்ணெய் விநியோகப் பாதைகள் சீராக இயங்கி வருவதாக உறுதியளித்துள்ளார்.
இந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் போதிலும், நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என அமெரிக்கா நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.