சண்டை போடாமல் கிரீன்லாந்தை கைப்பற்ற புது வியூகம் போடும் டிரம்ப்!
டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள 'கிரீன்லாந்து' நிலப்பரப்பைக் கையகப்படுத்தும் விவகாரத்தில்,தமக்கு எவ்வித செலவுமின்றி "முழுமையான அனுமதி" வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கின் சுயாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தொடர்பாக நேட்டோ (NATO) பொதுச் செயலாளர் மார்க் ரூட்டேவுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகத் தெரிவித்த ட்ரம்ப், இது தொடர்பான எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை
கோல்டன் டோம்' (Golden Dome) ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதி கிரீன்லாந்தில் அமைக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எதிரிகளின் தாக்குதல்கள் கிரீன்லாந்து ஊடாகவே முன்னெடுக்கப்பட வாய்ப்புள்ளதால், இது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு மிக அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், கால எல்லை இன்றி அங்கு முழுமையாகச் செயற்படுவதற்கான அனுமதியையே தாம் எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பொருளாதார முதலீடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்ற போதிலும், நாட்டின் இறையாண்மை குறித்து எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி கிரீன்லாந்தைக் கைப்பற்றப் போவதாக தெரிவித்த ட்ரம்ப், தற்போது இராணுவ ரீதியான நடவடிக்கைகளைத் தவிர்த்து உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.