எரிபொருள் விலை விவகாரத்தில் உலக நாடுகளிடம் டிரம்ப் அதிருப்தி
உலகளவில் எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள அதிருப்தி மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை பிரச்சினையைத் தீர்க்க நட்பு நாடுகள் முன்வராத நிலையில், “உலக நாடுகள் தங்களுக்குத் தேவையான எண்ணெய்யைத் தாங்களே போராடி பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், “அமெரிக்காவில் போதுமான அளவு எண்ணெய் இருப்பதால், வேண்டுமானால் எங்களிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு லிட்டருக்கு ஒரு டாலரைத் தாண்டியுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் அமைந்துள்ள இஸ்பஹான் நகரின் மீது அமெரிக்க படைகள் கடும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
இந்தப் பகுதியில் ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைச் சேமித்து வைத்திருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் நம்புகின்றன. இதற்கு பதிலடியாக, துபை கடற்கரை அருகே சர்வதேச கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த குவைத் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
கப்பலில் தீப்பற்றியபோதிலும், பெரும் எண்ணெய் கசிவு தவிர்க்கப்பட்டதாகவும், மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சவூதி அரேபியா தனது தலைநகரை நோக்கி வந்த மூன்று ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் இந்த மோதலில் இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் மூன்று ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சர்வதேச சமூகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் ஒன்றை கூட்டத் திட்டமிட்டுள்ளது.