செய்தியாளரின் உடல் தோற்றத்தைக் கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செய்தியாளர் ஒருவரை 'அருவருப்பானவர்' எனக் குறிப்பிட்டு, அவரது உடல் தோற்றம் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தென் கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வொஷிங்டன் திரும்பியபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, எதிர்வரும் சனிக்கிழமை கன்சாஸ் மாநிலத்தில் குடியரசுக் கட்சியின் செனட்டர் ரொஜர் மார்ஷலுக்காக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் ட்ரம்ப் ஏன் பங்கேற்கவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், ரொஜர் மார்ஷல் சிறப்பாகச் செயற்பட்டு வருவதாகவும், அதனால் கன்சாஸ் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக காணொளி ஊடான பிரசாரக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ட்ரம்பின் குரலில் கரகரப்பு காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய செய்தியாளர், பயணங்களால் ஏற்பட்ட சோர்வு காரணமாகவே அவர் தனது பயணத்தை இரத்துச் செய்தாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், குறித்த கேள்வியைக் கேட்பதே தவறானது எனக் கூறியதுடன், செய்தியாளரை 'அருவருப்பானவர்' என்றும், உடல் தகுதியற்றவர் என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், "உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் மிகவும் மோசமாகத் தோற்றமளிக்கிறீர்கள்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.