ஈரான் தாக்குதலுக்குப் பின் ட்ரம்ப் அதிரடி கருத்து
வடக்கு இஸ்ரேலை இலக்கு வைத்து தெஹ்ரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் வலியுறுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
'Channel 12' ஊடகத்தின் மூத்த செய்தியாளர் பாரக் ரவிட்டுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்த ட்ரம்ப், ஈரானின் அண்மைய தாக்குதல்களால் உயிர்ச்சேதமோ பாரிய பாதிப்போ ஏற்படவில்லை என்றும், அதனால் இஸ்ரேல் பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபடாது என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
“நெதன்யாகு மீண்டும் தாக்குதல் நடத்தினால், இந்த மோதல் கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வரும் பகைமையைப் போல முடிவில்லாமல் தொடரும் அபாயம் உள்ளது” என அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், இரு தரப்புக்கும் ஏற்ற ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்பு தற்போது இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் ஒரு முக்கியமான உடன்பாட்டை எட்டுவதற்கு மிக அருகில் இருக்கிறோம்.
தற்போது நடைபெறும் தாக்குதல்கள் அந்த வாய்ப்பை வீணடிக்கக் கூடாது. அதனால் நெதன்யாகுவை தொடர்புகொண்டு பதிலடி தாக்குதலைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ள உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இரு தரப்பினரும் தங்களது தாக்குதல்களை ஏற்கனவே நடத்தியுள்ளனர். இஸ்ரேல் தனது தாக்குதலை மேற்கொண்டது. ஈரானும் தனது பதிலை வழங்கியுள்ளது. இனி மேலும் ஒரு தாக்குதல் தேவையில்லை.
இன்றிரவு புதிய தாக்குதல்கள் இடம்பெறுவதை நான் காண விரும்பவில்லை” என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தீர்மானித்தால் அதற்கு அமெரிக்கா ஆதரவளிக்குமா என்பது குறித்து தெளிவற்ற நிலை காணப்படுவதாக பாரக் ரவிட் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் “இந்த மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடவில்லை” என்று தெரிவித்ததாகவும், புதிய மோதல் தீவிரமடையும் அபாயத்தை கருத்தில் கொண்டு இஸ்ரேலிய கொள்கை வகுப்பாளர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இஸ்ரேலிய அதிகாரிகள் முன்னதாக வெளியிட்ட கருத்துகளில், ஈரானின் தாக்குதல்களுக்கு எதிராக “வலுவான பதிலடி” நடவடிக்கை ஒன்றைத் திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருந்ததாக 'Channel 12' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.