இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வரி திட்டம் ; டிரம்பின் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜெனரிக் மருந்துகளுக்கும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு 0 சதவீத வரி தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், ஒரு வருட காலத்திற்கு ஜெனரிக் மருந்துகளுக்கான இறக்குமதி வரி 100 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும், அதற்குப் பிறகு அது 200 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலைகளை அமெரிக்காவிலேயே அமைப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜெனரிக் மருந்து உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவுக்குள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நிறுவனங்களுக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட காலத்திற்குள் அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகளை அமைக்கத் தவறும் பட்சத்தில் அபராதங்கள் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதாகும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் பிராண்டட் மருந்துகளுக்கான தற்போதைய வரி விதிப்பு முறையில் மாற்றம் எதுவும் செய்யப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முழுவதும் இதுவரை இல்லாத அளவில் புதிய மருந்து உற்பத்தி வசதிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், உள்நாட்டு மருந்து உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வரிக் கொள்கை, வெளிநாட்டு உற்பத்தியைச் சார்ந்திருக்கும் மருந்துத் துறையை அமெரிக்காவுக்குள் மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.