ஹொர்முஸ் நீரிணை குறித்து டிரம்பின் அறிவிப்பு
ஹொர்முஸ் நீரிணை வழியே "கப்பல்கள் நகரத் தொடங்கியுள்ளன" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானுடன் மேற்கொண்டு வந்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இருதரப்பும் இணைந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததை அடுத்து, திங்கள்கிழமை டிரம்ப் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ உரை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், முதற்கட்ட உடன்படிக்கையின்படி ஹொர்முஸ் நீரிணை திறக்கப்படும், ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை நீக்கப்படும் மற்றும் அனைத்து முனைகளிலும் சண்டை நிறுத்தப்படும் என்று இரு தரப்பும் தெரிவித்துள்ளன.

இருப்பினும், ஈரானின் அணுசக்தி திட்டம், பிராந்தியத்தில் உள்ள அதன் ஆதரவு அமைப்புகளுக்கான நிதியுதவி, முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் மற்றும் தடைகளை நீக்குதல் போன்ற மிகவும் சிக்கலான விவகாரங்கள் குறித்து அடுத்த 60 நாட்கள் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹொர்முஸ் நீரிணையில் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் உட்பட பல கப்பல்கள் நகரத் தொடங்கியுள்ளன. அவை ஓமானின் கடல் எல்லைக்கு உட்பட்ட, முற்றிலும் பாதுகாப்பான தெற்கு 'ஹைவே' பாதையில் பயணிக்கின்றன.
மேலும் பயணிக்க வேறு சில பகுதிகளும் உள்ளன. கடற்படை கண்ணிவெடிகள் காரணமாக இந்தப் பாதை ஆபத்தானதாகக் கருதப்பட்ட நிலையில் டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஒப்பந்த கையெழுத்து விழா வரை அமலில் இருக்கும் என்று அமெரிக்க ராணுவ ஆலோசனை அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ உத்தரவு வரும் வரை யாரும் எல்லையைக் கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் குறித்த சாதகமான சமிக்ஞைகளால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை மீண்டும் எழுச்சி பெற்றுள்ள போதிலும், ஹொர்முஸ் நீரிணை முழுமையாகச் செயல்பட இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணி 40 முதல் 50 நாட்கள் வரை நீடிக்கலாம் என்பதால், கப்பல் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இப்போதைக்கு முழுமையான பாதுகாப்புடன் பயணிக்க தயக்கம் காட்டுகின்றன.
எனினும் சில நிறுவனங்கள் இப்போதே பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருகின்றன. சர்வதேச கப்பல் போக்குவரத்து வாரியத்தின் (ICS) தகவல்படி, சுமார் 500 கப்பல்களும், 20,000 மாலுமிகளும் இந்த நீரிணையை கடப்பதற்காகக் காத்திருக்கின்றனர்.
பிரான்சில் தொடங்கும் ஜி7 (G7) உச்சிமாநாட்டில் கண்ணிவெடிகளை அகற்றுவது குறித்து விவாதிக்க உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். ஹொர்முஸ் நீரிணையை எதிர்காலத்தில் நிர்வகிப்பது மற்றும் அதன் விதிகள் குறித்து இன்னும் தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை.