ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மீதான 100% வரி திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திய டிரம்ப்
அமெரிக்காவின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு, ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து எண்ணெய், எரிவாயு கொள்முதல் செய்வது தொடர்பாக முன்மொழியப்பட்டிருந்த தடைகள் மற்றும் சுங்க வரிகளைத் தற்காலிகமாக நீக்கி அமெரிக்க ஜனாபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் ஒப்புதல் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கை அமலுக்கு வந்தால், ரஷ்ய எண்ணெயைச் சார்ந்துள்ள நாடுகளின் வர்த்தகத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனக் கவலைகள் எழுந்தன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவில், 'லிண்ட்சே கிரஹாம்' சட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டிருந்த குறிப்பிட்ட தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளைத் தற்காலிகமாக நீக்குவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் இத்தகைய விலக்குகளை வழங்குவது அமெரிக்காவின் தேசிய நலனுக்கு உகந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது அதிகப்படியான வரிகளை விதிப்பதற்கான அதிகாரத்தை அதிபருக்கு வழங்கும் வகையில் இந்தச் சட்டம் முன்மொழியப்பட்டிருந்தது.
ரஷ்யாவுடன் தொடர்புடைய சில நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடைகளை விதிப்பதற்கான ஏற்பாடுகளும் இதில் இடம்பெற்றிருந்தன.
இதற்கிடையில், அமெரிக்காவின் உள்நாட்டு எரிபொருள் விலையைக் குறைக்கும் நோக்கமும் இந்த முடிவுக்குப் பின்னணியில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது வரிகளை விதிப்பது தொடர்பான நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்துவது இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு குறுகிய காலத்தில் நிவாரணமளிக்கக்கூடும்.
எனினும், இந்த முடிவின் நீண்டகால தாக்கம், சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்காவின் அடுத்தகட்ட வர்த்தகக் கொள்கைகள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.