கனடாவை மீண்டும் எச்சரிக்கும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உரங்களுக்கு எதிர்காலத்தில் மிகக் கடுமையான வரிகள் விதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்க விவசாயிகள் எதிர்கொள்ளும் வர்த்தக அசாதாரண நிலைக்கு உதவியாக 12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வேளாண் உதவி திட்டத்தை அறிவித்ததையடுத்து, வாஷிங்டனில் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் அவர் இவ்வாறு கூறினார்.
அமெரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படும் உரங்கள் தற்போது பெரும்பாலும் கனடாவில் இருந்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடுமையான வரி
அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டுமெனில், கனடிய உற்பத்திகள் மீது கடுமையான வரி விதிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் நீடித்து வரும் வர்த்தக முரண்பாடுகள் மற்றும் கனடா உள்ளிட்ட நட்பு நாடுகளுடனான வர்த்தகத் தெளிவின்மையால் அமெரிக்க விவசாயிகள் பயிர்களை விற்கவும் எதிர்காலத் திட்டமிடலிலும் கடினநிலையை சந்தித்து வருகின்றனர்.
பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்படும் பொட்டாஷ் உற்பத்தியில் கனடா உலகில் முதலிடம் பெற்றுள்ளது. உற்பத்தி செய்யப்படும் பொட்டாஷ் உரங்களில் 95%க்கு மேற்பட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதில் “அமெரிக்காவே” மிகப்பெரிய இறக்குமதியாளர் என கனடிய உர நிறுவனம் தகவல் வழங்குகிறது.
உரங்களுக்கு வரி விதிப்பது விவசாயிகளின் செலவைக் குறைக்கும் என டிரம்ப் கூறினாலும், இதுவரை நடந்த பல்வேறு வர்த்தகப் போர்களால் செலவுகள் மட்டுமே உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.