சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் ; மார்தட்டும் ட்ரம்ப்
தாய்லாந்து-கம்போடியா இடையே நிலவும் நீண்ட கால எல்லை பிரச்சினை தற்போது மோதலாக வெடித்தது. இதனால் இரு நாடுகளின் வீரர்களும் எல்லையில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் இதுவரை இரு தரப்பிலும் 33 பேர் பலியாகி உள்ளனர்.
அதன்பிறகு இரு நாடுகளின் தலைவர்களிடமும் மோதலை தொடர்ந்தால் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் பாதிக்கப்படும் என டிரம்ப் கூறினார். இதனால் அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.
அமைதியின் தலைவர்
இதனையடுத்து மலேசியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில் எவ்வித நிபந்தனையுமின்றி மோதலை முடிவுக்குக் கொண்டு வர அவர்கள் ஒப்புக்கொண்டதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கம்போடியா-தாய்லாந்து போர் நிறுத்தத்திற்கான தனது ஈடுபாடு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ள அவர், "தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் மற்றும் கம்போடியாவின் பிரதமரிடம் இப்போதுதான் பேசினேன். ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஈடுபாட்டிற்குப் பிறகு, இரு நாடுகளும் ஒரு போர் நிறுத்தம் மற்றும் அமைதியை எட்டியுள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளோம்.
வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு எனது வர்த்தகக் குழுவிற்கு நான் அறிவுறுத்தி உள்ளேன். இப்போது ஆறு மாதங்களில் பல போர்களை முடித்துவிட்டேன் - அமைதியின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" என்று அதில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.