டிரம்பின் திரைப்பட வரி திட்டம் குறித்து டொரண்டோ மேயர் அதிருப்தி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் மீது 100 சதவீத வரி விதிக்க முடிவெடுத்துள்ளதாக கூறியதை தொடர்ந்து, “இது டொரண்டோவை மோசமாக பாதிக்கும்,” என நகர மேயர் ஒலிவியா சோ தெரிவித்துள்ளார்.
"அமெரிக்க திரைப்பட தொழில் வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது," எனவும், "மற்ற நாடுகள் திட்டமிட்டு படைப்பாளிகளை அமெரிக்காவிலிருந்து வேறு இடங்களுக்கு ஈர்த்துவருகின்றன, இது தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு எனவும் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டார்.
அந்த வரி எப்போது, எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்பது இன்னும் தெளிவாக இல்லை. எனினும், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், “இதில் நாங்கள் செயல்படுகிறோம்,” என தெரிவித்துள்ளார்.
‘ஹாலிவுட் நார்த்’ என அழைக்கப்படும் டொரண்டோ மற்றும் வான்கூவர் நகரங்கள் ஏற்கனவே பல அமெரிக்க படங்களுக்கு முக்கிய படப்பிடிப்பு தளங்களாக உள்ளன.
குறைந்த செலவுகள் மற்றும் வரிவிலக்கு ஊக்கங்கள் காரணமாக இவை திரைப்பட நிறுவனங்களால் விரும்பப்படுகிறது.
The Shape of Water, Suicide Squad, Shazam உள்ளிட்ட வெற்றிப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டவை. Pinewood, Cinespace, Revival House போன்ற முக்கிய தயாரிப்பு ஸ்டுடியோக்கள் டொரண்டோவில் செயல்படுகின்றன. டொரண்டோவில் திரைப்படத் துறையில் சுமார் 30,000 பேர் வேலை செய்கிறார்கள்.
குறைந்த செலவுகளுக்கும், வரிவிலக்குகளுக்கும் அப்பால், திறமையான தொழில்நுட்பக் குழுவே அமெரிக்க தயாரிப்பாளர்களை இங்கு வர வைக்கிறது. இவை உண்மையில் வெளிநாட்டு படங்கள் அல்ல. அவை அமெரிக்க படங்களே,” என டொரண்டோ மேயர் தெரிவித்துள்ளார்.
“இந்த வரி திட்டம் எனக்கே எதிர்பாராத ஒன்று. நம்புவோம், இது சரியாகிவிடும். இல்லையெனில் இது கனடா மட்டும் அல்ல, அமெரிக்காவுக்கே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரி தொலைக்காட்சி தொடர்களுக்கும் பொருந்துமா என்பதைப் பற்றி இன்னும் தெளிவாகவில்லை.
பல தொலைக்காட்சி தொடர்கள் தற்போது டொரண்டோவில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.