அமெரிக்க சபாநாயகரின் லேப்டாப்பை திருடிய பெண்? ரஷியாவுக்கு விற்க முயற்சி
அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற, நிலையில் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் பொலிஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வன்முறையின் போது நூற்றுக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதுடன் சிலர் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் எடுத்து சென்றனர். இந்நிலையில், பாராளுமன்ற வன்முறையின் போது சபாநாயகர் நான்சி பெலோசியின் அறையில் இருந்த அவரது லேப்டாப் கம்ப்யூட்டர் திருடப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாகி வருகிறது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் எஃப்பிஐ அமைப்பு (அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு) பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த ரிலே ஜூன் வில்லியம்ஸ் என்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ஜூன் வில்லியம்ஸ் தான் நான்சி பெலோசியின் அறையில் இருந்த லேப்டாப் கம்ப்யூட்டரை திருடியதாக எஃப்பிஐ அமைப்பால் குற்றம்சுமத்தப்படுகிறது. அத்துடன் குறித்த பெண் திருடிய லேப்டாப் கம்ப்யூட்டரை ரிலே ஜூன் ரஷியாவில் உள்ள தனது நண்பருக்கு அனுப்ப முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நண்பர் லேப்டாப்பை ரஷிய உளவு அமைப்பிடம் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக எஃப்பிஐ அமைப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தற்போது ஜூன் வில்லியம்ஸ் பென்சில்வேனியாவில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாகவும், அவரை தேடும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் இந்த நிகழ்வு குறித்து எஃப்பிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும், அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் லேப்டாப் தற்போது எங்கு உள்ளது என்ற தகவலை எஃப்பிஐ அதிகாரிகள் வெளியிடவில்லை.