வெளியேறும் நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள்: வெறிச்சோடும் அலுவலகங்கள்
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், தற்போது ஊழியர்களுக்கு கடும் நெருக்கடி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் வாங்கிய பின்னர், அதிரடி நடவடிக்கையாக சுமார் 3,000 ஊழியர்களை நீக்கினார். இந்த நிலையில், எஞ்சியுள்ள ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதி தீவிரமாக நீண்ட மணிநேரம் பணியாற்ற வேண்டும் என ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல டுவிட்டர் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.
டுவிட்டர் ஊழியர்களில் இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 180 பேர்கள் வாக்களித்ததில் 42% பேர்கள் டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேற இருப்பதாக கூறியுள்ளனர். வெறும் 7% பேர்கள் மட்டும், டுவிட்டரில் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குறிப்பிட்ட ஊழியர்களை தனியாக சந்தித்து, தொடர்ந்து பணியாற்ற எலான் மஸ்க் வலியுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. 50 டுவிட்டர் ஊழியர்கள் சந்தித்துக்கொண்ட ஒரு நிகழ்வில் 40 பேர்கள் டுவிட்டரில் இருந்து வெளியேற இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இன்னொரு 360 பேர்கள் கொண்ட டுவிட்டர் ஊழியர்கள் குழு, தாங்களும் மிக விரைவில் வேலையை விட்டுவிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமது டுவிட்டர் பக்கத்தில் சமாதியின் புகைப்படத்தை எலான் மஸ்க் பதிவு செய்துள்ளது பெரும் விவாதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.