நாள் ஒன்றிற்கு ரூ.32 கோடியை இழக்கும் எலான் மஸ்கின் டுவிட்டர்
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர், இதுவரை 3,500 ஊழியர்களை நீக்கியுள்ள எலான் மஸ்க், நாள் ஒன்றிற்கு ரூ.32 கோடியை இழப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க் கடும் இழுபறிக்கு பின்னர் வாங்கினார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் பலரையும் வேலையில் இருந்து அதிரடியாக நீக்கினார்.
அது மட்டுமின்றி, இந்தியா உட்பட பல நாடுகளில் செயல்பட்டு வந்த டுவிட்டர் அலுவலகங்களில் பணியாற்றிய ஊழியர்கள் பெரும்பாலானோரை தற்போது நீக்கியுள்ளார்.
இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை குறித்து எலான் மஸ்க் தெரிவிக்கையில், டுவிட்டர் நிறுவனத்தில் ஊழியர்கள் குறைப்பு தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது, துரதிஷ்டவசமாக நிறுவனம் நாள் ஒன்றிற்கு 32 கோடி ரூபாயை இழக்கும்போது, நிறுவனத்தை விட்டு வெளியேறும் அனைவருக்கும் 3 மாத ஊதியம் வழங்கப்படும், அது சட்டப்பூர்வமான அனுமதி அளவை விட 50 சதவிகிதம் அதிகம் என்பது தான் உண்மை என தெரிவித்துள்ளார்.