ஒன்றாரியோவில் வீடொன்றில் சடலங்கள் மீட்பு
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வீடொன்றில் சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பிரேஸ்பிரிட்ஜ், பீட்ரிஸ் டவுன் லைன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பிரேஸ்பிரிட்ஜ் ஒன்டாரியோ மாகாண பொலிஸார் (OPP) தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 1ம் திகதி இரவு 8:00 மணியளவில், பீட்ரிஸ் டவுன் லைன் சாலையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸாருக்கு அறிக்கை கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்ற போது, ஒரு உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது, மேலும் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நடவடிக்கைகளின் போது அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அந்த உத்தரவு நீக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மேலதிக அச்சுறுத்தல் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் சேதமடைந்த வீட்டில் மேலும் இரு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர்களின் அடையாளம் பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே உறுதிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேஸ்பிரிட்ஜைச் சேர்ந்த 29 வயதான மிட்செல் கிரே என்பவரை கொலை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.