வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட இரு காவல்துறை அதிகாரிகள்!
பிரான்சில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட இரு காவல்துறையினர் மகிழுந்துக்குள் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் Aulnay-sous-Bois நகரில் வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. காவல்துறையினர் இரவு நேர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, 1.30 மணி அளவில் மகிழுந்து ஒன்றை அதிகாரிகள் சோதனையிடும் நோக்கில் வழி மறித்தனர்.
மகிழுந்தை நிறுத்திய அதன் சாரதி, அதிகாரிகள் மகிழுந்தை நெருங்கி ஆவணங்களை பரிசோதனை செய்ய கோரியபோது, மகிழுந்தின் கண்காணிகளை வேகமாக மூடி, மகிழுந்தை முடுக்கியுள்ளார்.
இந்நிலையில் அதிகாரிகளின் கைகள் கண்ணாடி கதவுக்குள் சிக்கி, இழுத்துச் செல்லப்பட்டனர். 10 மீற்றருக்கும் அதிகமாக இரு அதிகாரிகளும் இழுத்துச் செல்லப்பட்டதன் பின்னர், கண்ணாடிகள் இறக்கப்பட்டு, அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் மகிழுந்து அங்கிருந்து தப்பிச் சென்றது. இரு அதிகாரிகளும் காயமடைந்த நிலையில், Robert Ballanger மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.