வெளிநாடொன்றில் பெரும் சோகம்: கண்ணீருடன் பிணவறை நோக்கி சென்ற பெற்றோர்கள்
உகாண்டாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு படையினர் பாடசாலைக்குள் நுழைந்து நடத்திய கொடூர தாக்குதலில் 41 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் மாணவர்கள் என்ற நிலையில், அவர்களின் பெற்றோர்கள் பிணவறை நோக்கி படையெடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை காங்கோ எல்லை அருகே அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் அத்துமீறி நுழைந்த ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் 38 மாணவர்கள் உட்பட 41 பேர்களை கொலை செய்துள்ளனர்.
எனினும், 6 பேர்களை கடத்தியும் சென்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், வாள் வெட்டில் கொல்லப்பட்டதாகவும், சிலரை உயிருடன் எரித்தும் கொலைவெறி தாக்குதல் முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலை விடுதிக்குள் நுழைந்த ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் மாணவர்களின் படுக்கைகளை தீக்கிரையாக்கியுள்ளனர்.
உகாண்டா ராணுவத்தினரும் உள்ளூர் பொலிசார் இந்த அட்டூழியத்திற்கு ஐ.எஸ் ஆதரவு ADF அமைப்பினர் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தாக்குதல் முன்னெடுத்தவர்களை தேடி வருவதாகவும் கடத்தப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூட்டப்பட்டிருந்த மாணவர்கள் விடுதியை தீவிரவாதிகள் தீக்கிரையாக்கியுள்ளதால், சடலங்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் 20 மாணவிகள் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், 17 ஆண் மாணவர்கள் தங்களுடைய விடுதியில் எரித்துக் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சடலங்கள் பாதுகாக்கப்படும் Bwera பகுதி பிணவறைக்கு கண்ணீர் மற்றும் கதறலுடன் பெற்றோர்கள் படையெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீயில் கருகிய சடலங்களை அடையாளம் காணும்பொருட்டு டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2010ம் ஆண்டுக்கு பின்னர் உகாண்டாவில் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இதுவென கூறுகின்றனர்.
அப்போது சோமாலியாவை சேர்ந்த அல்-ஷபாப் குழுவால் கம்பாலாவில் முன்னெடுக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 76 பேர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.