போதைப்பொருள் கொடுத்து மனைவியை பலருக்கு விருந்தாக்கிய அரசியல்வாதி; 13 ஆண்டு கொடுமை!
இங்கிலாந்தின் ஸ்விண்டன் (Swindon) பகுதியில், மனிதநேயமற்ற முறையில் தனது மனைவியையே 13 ஆண்டுகாலமாகப் போதைப்பொருள் கொடுத்துப் பலருக்கு விருந்தாக்கிய முன்னாள் அரசியல்வாதியின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்து அதிரவைத்துள்ளது.
49 வயதான பிலிப் யங் (Philip Young) என்ற அந்த நபர், தனது மனைவி ஜோன் யங் (Joanne Young) என்பவருக்குத் தெரியாமலேயே அவருக்குப் போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்து நண்பர்களுடன் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு
கடந்த 2010 முதல் 2023 வரை சுமார் 13 ஆண்டுகள் இந்த கொடுமையை அரங்கேற்றியுள்ளார். இந்நிலையில் கணவனே தனது மனைவியின் வாழ்வைச் சிதைக்கத் தனது நண்பர்களையும் கூட்டாளிகளையும் பயன்படுத்தியமை அதிர வைத்துள்ளது.
இந்தக் கொடூரச் செயலில் பிலிப் யங் மட்டுமின்றி, மேலும் 5 ஆண்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜோன் யங் உணர்வற்ற நிலையில் இருந்தபோது அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல் துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நார்மன் மேக்சோனி, டீன் ஹாமில்டன், கானர் சாண்டர்சன் டாய்ல், ரிச்சர்ட் வில்கின்ஸ் மற்றும் முகமது ஹசன் ஆகிய அந்த ஐந்து நபர்களும் தற்போது கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி கவுன்சிலராக இருந்த ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டது பிரித்தானிய அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் ஜோன் யங், தனது அடையாளத்தை மறைக்க விரும்பாமல், உலகிற்குத் தனது துயரத்தை வெளிப்படுத்தத் துணிச்சலாக முன்வந்துள்ளார்.
அதேவேளை பிரான்சில் இதேபோன்ற முறையில் பாதிக்கப்பட்ட ஜிசெல் பெலிகாட் (Gisèle Pelicot) என்பவரைப் போலவே, இவரும் தனது பெயரை ஊடகங்களில் வெளியிட அனுமதி அளித்துள்ளார்.
பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்
பிலிப் யங் மீது மட்டும் சுமார் 56 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் கற்பழிப்பு, போதைப்பொருள் கொடுத்து மயக்கமுறச் செய்தல் மற்றும் பிறரின் அந்தரங்கத்தைப் படம் பிடித்தல் (Voyeurism) உள்ளிட்ட தீவிரமான பிரிவுகள் அடங்கும். தற்போது இந்த ஆறு நபர்களும் ஸ்விண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (Swindon Magistrates’ Court) ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
நீண்ட காலமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தச் சதியை வெளிக்கொண்டு வரப் போலீசார் பல மாதங்களாகத் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
“இது மிகவும் சிக்கலான மற்றும் விரிவான விசாரணை” எனத் தெரிவித்துள்ள வில்ட்ஷயர் காவல் துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கணவனால் 13 ஆண்டுகால நரகத்தை அனுபவித்த அந்தப் பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.