பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் பேசியது என்ன?
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ரஷியாவை பயங்கரவாத நாடாக அங்கீகரியுங்கள் என உரையாற்றியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 14-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய துருப்புகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) காணொளி இணைப்பு மூலம் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆப் காமன்ஸில் வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனிடம், (Boris Johnson) “மேற்கத்திய நாடுகளின் உதவிக்காக நாங்கள் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறோம். இந்த உதவிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம், உங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று உக்ரைன் அதிபர் கூறினார்.
மேலும் அவர், “தயவு செய்து ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து, அந்த நாட்டை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்கவும். எங்கள் உக்ரேனிய வானம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும். தயவு செய்து நீங்கள் செய்ய வேண்டியதையும் உங்கள் நாட்டின் மகத்துவத்தால் செய்யுங்கள்.
உக்ரைனுக்கு மகிமை, பிரித்தானியாவிற்கு மகிமை”, என்றார். இந்த உணர்ச்சிகரமான உரையில், ஜெலென்ஸ்கி பிரித்தானியாவின் வின்ஸ்டன் சர்ச்சிலின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார். மேலும் ரஷ்யப் படைகளை ஆகாயம், கடல் மற்றும் தெருக்களிலும் எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்தார்.