இராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும்: உக்ரைனுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால், முதலில் ராணுவத்தை உக்ரைன் விலக்கிக்கொள்ள வேண்டும் என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.
உக்ரைன் தங்கள் ராணுவத்தை விலக்கிக்கொள்ள மறுத்தால், அதை ரஷ்யா முன்னெடுத்து செய்யும் எனவும் எச்சரித்துள்ளது. மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவோம் என கடந்த பிப்ரவரி 24ம் திகதி களமிறங்கிய ரஷ்யாவால், இதுவரை உக்ரைனின் சில பகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்துள்ளது.
ஆனால் ரஷ்யா கைப்பற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளை உக்ரைன் தடாலடியாக மீட்டுள்ளது. இருப்பினும் பல இழப்புகளை எதிர்கொண்டும் ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து ஆயுதங்களையும் ஆதரவையும் அளித்து வருகிறது. இந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
ஆனால், போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா தயார் என்றும், உக்ரைன் அதற்கு தயாராக இல்லாததே போர் தொடர்வதற்குக் காரணம் என்றும் ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது.
மேலும், போர் முடிவுக்கு வர உக்ரைன் தனது ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கி லாரவ் வலியுறுத்தி உள்ளார்.
போர் முடிவுக்கு வருவது தற்போது உக்ரைன் மற்றும் அதனை ஆதரிக்கும் நாடுகளின் கைகளில்தான் உள்ளது என தெரிவித்துள்ள செர்கி லாரவ், ரஷ்யாவுக்கு எதிரான அர்த்தமற்ற எதிர்ப்பை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.