ட்ரம்பை சந்திக்கவுள்ள உக்ரைன் ஜனாதிபதி ; ரஷ்யாவின் தாக்குதல்களால் 06 பேர் பலி
அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சந்திக்கவிருக்கும் சூழலில், ரஷ்யா-உக்ரைன் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் தாக்கிக் கொண்டதில் 6 போ் உயிரிழந்தனா்.
உக்ரைனின் 4 பிராந்தியங்களைக் குறிவைத்து, ரஷ்யா அதிகாலை நடத்திய தாக்குதலில் டினிப்ரோ நகரில் நால்வா், சுமி பகுதியில் ஒருவா் என 5 போ் உயிரிழந்தனா். தலைநகா் கீவ் உள்ளிட்ட இடங்களில் பலா் காயமடைந்தனா்.

இதேபோல், ரஷ்யாவின் சமாரா பகுதியில் உள்ள முக்கிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா் நால்வா் காயமடைந்தனா்.
நான்கரை ஆண்டுகளைக் கடந்துள்ள இப்போரில், சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலால் சா்வதேச டீசல் விலையும் கருங்கடல் வழிப் போக்குவரத்து முடங்கியதால் தானிய விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இச்சூழலில், ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, அதிபா் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவா்களைச் சந்தித்துப் பேசுகிறாா்.
குறிப்பாக, ரஷியாவின் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை முறியடிக்கத் தேவையான ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா கூடுதலாக வழங்க வேண்டும் என டிரம்ப்பிடம் அவா் நேரில் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளாா்.