ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்!
உக்ரேன் கடற்படையால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol), கடற்படையின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
உளவுத்துறை நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட குறித்த கப்பல், டானூப் நதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானது. இதன் ஒரு பகுதி உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்தில் அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்ததாக ஆர்டி தெரிவித்துள்ளது.
உக்ரேனிய கடற்படைக் கப்பலை அழிக்க கடல் ஆளில்லா விமானம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும் என்று ரஷ்யாவின் TASS செய்தி அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. கப்பல் தாக்கப்பட்டதை உக்ரேனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்தத் தாக்குதலில் ஒரு பணியாளர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று உக்ரேனிய கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி கியேவ் இன்டிபென்டன்ட்செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா, அண்மைய மாதங்களில் உக்ரேன் மீதான மோதலில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஆளில்லா அமைப்புகளின் உற்பத்தியை துரிதப்படுத்த நகர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.