அல்பர்டாவில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை
கனடாவின் வட அல்பெர்டா மற்றும் எட்மண்டன் பிராந்தியத்தில் காட்டுத் தீ புகை காரணமாக காற்றுத் தரம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
எட்மண்டனில் “புகை காரணமாக காற்றுத் தரம் மிகவும் மோசமாகவும், காட்சி திறன் குறைவாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை முழுவதும் எட்மண்டனில் புகை மூட்டம் நிலவிய நிலையில், இது இரவு முழுவதும் நீடிக்கும் எனவும், காற்றுத் தர சுகாதார குறியீட்டில் 10+ (மிக அதிக ஆபத்து) என்ற அளவுக்கு உயரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரதேச மக்களை, வெளியில் செலவிடும் நேரத்தை குறைக்கவும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடியிருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக குழந்தைகள், முதியோர், மேலும் நீண்டகால சுவாச நோய் உள்ளவர்கள் வெளியில் கடுமையான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் கொண்டவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதெனவும், ஆனால் அனைவருக்கும் இதன் தாக்கம் இருக்க முடியும் எனவும் எச்சரிக்கை வலியுறுத்துகிறது.
மேலும், அல்பெர்டா மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் வெப்ப அலை எச்சரிக்கை அமலில் உள்ள நிலையில், சூடான காலநிலையில் புகை மாசு அதிகரிக்கும் போது மக்கள் குளிர்ச்சியை பராமரிக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.