எத்தியோப்பியா நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கலாம்
தெற்கு எத்தியோப்பியாவின் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பலத்த மழையினால் எத்தியோப்பியாவில் கோஃபா மண்டலத்தின் தொலைதூர மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கட்கிழமை காலை மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
மண்சரிவுகள் ஏற்பட்ட கெஞ்சோ ஷாச்சா கோஸ்டி பகுதியில் சடலங்களையும் உயிர்பிழைத்தவர்களையும் மீட்பதற்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 24 ஆம் திகதி வரை 257 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கலாம் என மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் மேலும் மண்சரிவு ஏற்பட ஆபத்து இருப்பதால் ஐந்து வயதுக்குட்பட்ட 1,320 குழந்தைகள் , 5,293 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் உட்பட 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
காயங்களுக்குள்ளான 12 பேர் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 125 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
காணாமல்போனவர்களின் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த பேரழிவு குறித்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.