ஹெய்ட்டியின் வான்பரப்பில் அமெரிக்க விமானங்கள் மீது துப்பாக்கி பிரயோகம்
ஹெய்ட்டியின் வான்பரப்பில் அமெரிக்காவின் இரண்டு ஜெட்விமானங்கள் துப்பாக்கி பிரயோகத்தினால் சேதமடைந்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
ஹெய்ட்டியில் அதிகரிக்கும் காடையர் குழுக்களின் வன்முறைகளின் மத்தியில் அந்த நாடு விமானப்போக்குவரத்தினை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஹெய்ட்டி தலைநகர் போட் ஒவ் பிரின்சில் தரையிறங்கிக்கொண்டிருந்த ஸ்பிரிட் எயர்லைன்ஸ் விமானத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது, அதன் பணியாளர் ஒருவர் சிறியகாயங்களிற்குள்ளானார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பின்னர் அந்த விமானம் அங்கு தரையிறங்காமல் டொமினிக் குடியரசின் சான்டியாகோவில் தரையிறங்கியது, அங்கு விமானத்தை சோதனையிட்டவேளை துப்பாக்கி பிரயோகத்திற்கு உட்பட்டது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தை சேவையிலிருந்து நிறுத்தியுள்ளோம்,ஹெய்ட்டிக்கான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அமெரிக்கன் எயர்லைன்ஸ் ஜெட்புளு விமானசேவைகளும் ஹெய்ட்டிக்கான தங்கள் சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
இதேவேளை ஹெய்ட்டியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த தனது விமானமொன்றில் துப்பாக்கிரவைகளால் ஏற்பட்ட சேதத்தை கண்டுபிடித்துள்ளதாக ஜெட்புளு விமானசேவை தெரிவித்துள்ளது.