இஸ்ரேலுக்கு எதிர்ப்பு ; மனித உரிமை அமைப்புகளுக்கு அமெரிக்கா தடை
அமெரிக்கா பாலஸ்தீனத்தின் மூன்று முக்கிய மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court – ICC) இஸ்ரேல் மீது போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த இந்த அமைப்புகள் ஆதரவளித்ததே அமெரிக்காவின் இந்த தடைக்கு காரணம் என கூறப்படுகின்றது.
நிதிப் பரிவர்த்தனைகளுக்குத் தடை
அல்-ஹக் (Al-Haq), அல் மீசான் மனித உரிமைகள் மையம் (Al Mezan Center for Human Rights) மற்றும் பாலஸ்தீன மனித உரிமைகள் மையம் (Palestinian Centre for Human Rights) ஆகிய இந்த மூன்று அமைப்புகளும் இஸ்ரேலுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளைத் தொடங்குமாறு ஐசிசியிடம் கோரிக்கை வைத்தன.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா இந்த அமைப்புகளின் சொத்துக்களை முடக்கி, நிதிப் பரிவர்த்தனைகளுக்குத் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, “வெட்கக்கேடானது” என்று வர்ணித்துள்ள அந்த அமைப்புக்கள் , தங்களின் வழக்கமான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாகவும், ஐசிசியுடன் தொடர்ந்து ஒத்துழைக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளன.
அமெரிக்காவின் இந்த முடிவை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் , ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் குடிமைச் சமூகத்தின் செயல்பாடுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்தச் சம்பவம், சர்வதேச நீதி மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.