வருட ஆரம்பத்திலேயே ஆட்டம் காணும் அமெரிக்க நாணயம்
கடந்த 2025ஆம் ஆண்டில் ஒரு தசாப்த காலப்பகுதியில் இல்லாதவாறு பாரிய சரிவைச் சந்தித்த அமெரிக்க டொலரின் பெறுமதி, 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஏனைய சர்வதேச பிரதான நாணயங்களுக்கு எதிராக டொலர் நிலைகுலைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, டொலரின் பெறுமதி 1.3 வீதத்தால் சரிந்துள்ளதாகவும், இதன்படி, 2026ஆம் ஆண்டு ஆரம்பித்து ஒரு சில நாட்களிலேயே டொலர் 2.6 வீத ஒட்டுமொத்த வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் டொலரின் பெறுமதி 9.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்துள்ளதாக கூறப்படுகின்றது. டொலரின் இந்த வீழ்ச்சி காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் 'யூரோ' (Euro) நாணயம், 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 1.2 டொலர் எனும் உயர் எல்லையைத் தொட்டுள்ளது.
அதேபோல் பிரித்தானிய பவுண்ட் மற்றும் ஜப்பானிய யென் ஆகிய நாணயங்களும் டொலருக்கு எதிராக அண்மைக்கால உச்சத்தைப் பதிவு செய்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் டொலர் மீது நம்பிக்கை இழந்து வருவதே இந்தத் தொடர் சரிவுக்குக் காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்காக டொலரின் பெறுமதியைத் திட்டமிட்டு குறைக்க ஜனாதிபதி ட்ரம்ப் விரும்புவதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.
இது குறித்துக் கேட்கப்பட்ட போது, "இல்லை, இது மிகச் சிறந்தது என்றே நான் நினைக்கிறேன்" என ட்ரம்ப் பதிலளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.