மோதல்கள் தீவிரமடையக்கூடும் ;சவுதியிலிருந்து அமெரிக்க அரசு ஊழியர்களை வெளியேற உத்தரவு!
அவசரத் தேவையின்றி பணியாற்றும் அரசு ஊழியர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளதாக ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான ஹவுத்திகளின் தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 25 அன்று தூதரகம் வெளியிட்ட பாதுகாப்பு எச்சரிக்கையின்படி, இந்த உத்தரவு அக்டோபர் 23 முதல் நடைமுறைக்கு வந்தது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி படைகளின் தாக்குதல்களால் பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதையும், பயண நடவடிக்கைகளில் கடுமையான பாதிப்புகள் உண்டாகியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த எச்சரிக்கை, மோதல்கள் விரைவாக தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
அண்மையில் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா வான்வழி வாகனத் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க அரசாங்க ஊழியர்கள், அந்நாட்டின் எந்தவொரு விமான நிலையத்தையும் பயன்படுத்த தூதரகத் தலைவரிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
மேலும் தாக்குதல்கள், வான்வெளி மூடல்கள், விமான இரத்துகள் மற்றும் பயண இடையூறுகள் ஏற்படும் அபாயம் குறித்து அமெரிக்கக் குடிமக்களுக்குத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சவுதி விமான நிலையங்களைப் பயன்படுத்தும் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பயணம் செய்வதற்கு முன்பு தங்கள் விமானத்தின் நிலையை விமான நிறுவனத்திடமும் விமான நிலையத்திடமும் நேரடியாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறும் அது வலியுறுத்தியுள்ளது.