அமெரிக்கா எச்-1பி வீசா கட்டண உயர்வு, கனடாவிற்கு ஏற்படக்கூடிய நன்மை
அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், H-1B சிறப்பு திறன் வீசா (skilled worker visa) விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்க தீர்மானித்துள்ளது.
இதனால் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு திறமையான தொழிலாளர்களை பணியில் அமர்த்த பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன.
அமெரிக்காவின் இந்த வீசா கட்டண அதிகரிப்பு கனடாவிற்கு நன்மைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனர் ஈலான் மஸ்க் உட்பட பலர் ஆதரிக்கும் இந்த வீசா, சர்வதேச தொழில்நுட்ப வல்லுநர்களை அமெரிக்கா ஆட்சேர்ப்பு செய்வதற்கான முக்கிய வழியாக இருந்தது. 2012 முதல் வழங்கப்பட்ட H-1B வீசாவில் 60% பேர் கணினி தொடர்பான வேலைகளில் இருந்துள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள், அமேசான், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றன.
ஆனால் இப்போது விண்ணப்ப கட்டணம் கடுமையாக உயர்ந்ததால், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமெரிக்காவில் பணியமர்த்த முடியாமல், கனடாவில் அலுவலகங்களைத் திறக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“ஒவ்வொரு முறையும் அமெரிக்கா உலகளாவிய திறமைக்கான கதவை மூடும்போது, அதனால் கனடாவே லாபம் அடைகிறது” என குடியேற்ற சட்டவியலாளர் பெக்கி ஃபூ வான் ட்ராப் கூறியுள்ளார்.
“இது கனடாவிற்கு கிடைத்த பரிசு போன்றது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “அமெரிக்கா வேலைவாய்ப்புகளை குறைத்துவிட்டால், கனடாவில் வேலை தேடி வருபவர்கள் அதிகரிப்பார்கள்” என போர்டர்ஸ் லோவ் நிறுவனர் ஆண்ட்ரஸ் பெலெனூர் தெரிவித்துள்ளார்.