படிக்க வந்த மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக்கொண்ட கனேடிய கல்லூரி மீது புகார்
கனடாவுக்குக் கல்வி கற்க வந்த வெளிநாட்டு மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கல்லூரி ஒன்றின்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டவரான யானிசா (Yanisa Kapetch, 25), என்னும் மாணவி, 2024ஆம் ஆண்டு, கனடாவின் மெட்ரோ வான்கூவரிலுள்ள Pacific Link College என்னும் கல்லூரியில் டிஜிட்டல் மீடியா கற்பதற்காக வந்துள்ளார்.
ஆனால், 2024 டிசம்பரில், கல்லூரியில் பாடம் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த Tamara Jansen என்பவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வீடு வீடாகச் சென்று Tamara Jansenக்கு ஆதரவாக துண்டுப் பிரதிகள் கொடுக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கிறார் யானிசா.
தாங்கள் Tamara Jansenஉடைய பிரச்சார அலுவலகத்துக்குச் சென்றதற்கும், வீடுவீடாக துண்டுப் பிரசுரம் கொடுத்ததற்கும் ஆதாரமாக புகைப்படங்களை சமர்ப்பிக்கவேண்டும், இல்லையென்றால் வகுப்பில் Attendance கொடுக்கப்படாது என்றும், அவர்கள் pass ஆக்கப்படமாட்டார்கள் என்றும் மாணவ மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லை என்பதை அறிந்த யானிசாவும் இன்னொரு வெளிநாட்டு மாணவியும் அது குறித்து தங்கள் ஆசிரியரிடம் கூற, அவரோ இது நாளை நீங்கள் கனேடிய குடிமகனாக குடிமகளாக ஆவதற்கு உதவும் என்று கூறியுள்ளார்.
தனக்கு கனேடிய குடியுரிமை பெறும் எண்ணமெல்லாம் இல்லை என யானிசா கூற, பல்கலை வளாக இயக்குநரான Dpenha என்பவர், நாளை நீ நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற MLAவின் பரிந்துரை அவசியம் உதவும் என்றும் கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, கனடாவுக்கு கல்வி கற்க வந்த மாணவர்களான தங்களை, தங்கள் விருப்பத்துக்கு மாறாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக மாணவர்களில் ஒருவர் முறைப்படி புகார் அளித்துள்ளார். தான் செலுத்திய கல்விக் கட்டணத்தை திருப்பிக் கொடுக்குமாறும் அவர் கல்லூரியை வற்புறுத்தியுள்ளார்.
தாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதற்கு ஆதாரமாக பல்கலை வளாக இயக்குநரான Dpenha முதலானோர் அனுப்பிய மின்னஞ்சல்களையும், தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் எழுத்துக்கொண்ட புகைப்படங்களையும் மாணவ மாணவியர் தங்கள் புகாருடன் இணைத்துள்ளார்கள்.
கல்வி கற்க வந்த வெளிநாட்டு மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய விவகாரம், அவர்கள் புகார்கள் அளித்துள்ளதைத் தொடர்ந்து பரபரப்பை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.