அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் ; பல மாத மோதலுக்கு முடிவு ஏற்படும் என எதிர்பார்ப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த பதற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை உருவானது. அதற்கு பதிலடியாக ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், ஹர்முஸ் ஜலசந்தியையும் மூடியிருந்தது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளும் உயர்வடைந்திருந்தன. மேலும், ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்ததால், சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் மத்தியஸ்தத்துடன் அமைதி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளின் முயற்சிகளின் பயனாக இந்த அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகளின்படி, அமெரிக்கா மற்றும் ஈரான் இரண்டும் மோதல் நடவடிக்கைகளை நிரந்தரமாக கைவிட வேண்டும்.
ஈரான் துறைமுகங்களைச் சூழ்ந்துள்ள அமெரிக்க கடற்படை நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதுடன், ஹர்முஸ் ஜலசந்தியும் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 19ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த அமைதி பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் நேரடியாக பங்கேற்காத நிலையில், அந்த நிபந்தனை நடைமுறைப்படுத்தப்படுமா என்பது தொடர்பில் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், மத்திய கிழக்கில் நிலவி வந்த பதற்றம் தணிவடைவதோடு, உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.