அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் ; ரஷ்யா கொடுத்த விளக்கம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் போது ஈரான் ரஷ்யாவிடம் எந்த இராணுவ உதவியையும் கோரவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரானிடமிருந்து ராணுவ உதவி கோரிக்கை எதுவும் வரவில்லை என்றும், ரஷ்யாவின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தற்போது பயன்படுத்தி வரும் ஷாஹெத் வகை ட்ரோன்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களில் ரஷ்யாவின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டாலும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்யா–ஈரான் இடையே கையெழுத்தான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் நேரடி ராணுவ உதவி குறித்து குறிப்பிடப்படவில்லை.
இதனால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது ரஷ்யா நேரடியாக தலையிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த தாக்குதல்களை ரஷ்யா கண்டித்து அவற்றை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.